Pages

Saturday, April 3, 2010

கம்ப ராமாயணம் – மாற்றான் பெருமை – ஒரு தொகுப்பு


திரு. நெல்லை கண்ணன் அவர்களின் கம்பராமாயணம் பற்றிய பேச்சினை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. எனக்கு இன்று கொஞ்சமேனும் உள்ள இலக்கிய பரிச்சயதுக்கு ஐயா அவர்களின் பங்கு அளவிட முடியாதது. எனக்கு பாரதியை, கம்பனை, வள்ளுவனை, இன்ன பிற அறிஞர்களை அறிவுக்களஞ்சியங்களை, அவர்களின் தமிழ் பங்களிப்பை ஐயா அவர்களின் துணை கொண்டு அறிய கூடிய வாய்ப்பை பெற்றேன்.  அவரின் மாணவன் எனும் முறையில் இந்த முயற்சி ஒரு சிறிய அன்பளிப்பு.,
இன்று தமிழ் பேசி தம்பட்டம் அடித்து கொள்ளும் அரசியலார்க்கு இந்த கட்டுரை, ஒரு எளிய அறிமுகம்.,
வாலியின் பெருமை பற்றி அனுமன் கூற்று
கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ
பொருள்:
வாலியின் வேகத்திற்கு முன்னதாக காற்று செல்லாது; கிரவும்சம் எனும் மலையினை தன் வேலால் பிளந்த கந்தனின் வேல் அவன் மார்பில் துளைக்காது; வெற்றியை உடையவனான அவ்வாலியின் வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்) இராவணனது ஆட்சி செல்லாது; அந்த இராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.,
ராமன் உன்னை கொல்லவே வந்துள்ளான் என்ற தன் மனையாளிடம் வாலி உரைத்தது.,
‘உழைத்த வல் இரு வினைக்கு
ஊறு கான்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவர்க்கு, இயல்பு அல
இயம்பி என் செய்தாய்?
பிழைத்தனை, பாவி!  உன்
பெண்மையால் ‘ என்றான்.
பொருள்:
தீவினை உடையவளே! வருந்திச் சேர்த்த கொடிய இருவினைகளுக்கு அழிவினை செய்யும் வழியினை காண முடியாமல் (இறைவனை அருள்வேண்டி) அழைத்து வருந்துகின்ற உலக உயிர்களுக்கு தருமத்தின் வழிகளையெல்லாம் தன் நடைமுறையால் காட்டிய அந்த ராமபிரானுக்கு பொருந்தாதவற்றை சொல்லி என்ன தவறு செய்துவிட்டாய்!. உன் பெண்மையால் இன்று நீ பிழைத்தாய்.,
ராமன் பெருமை பற்றி இராவணன் எண்ணுதல்
‘சிவனோ? அல்லன்; நான்முகன்
அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம்
எல்லாம் அடுகின்றான்;
தவனோ எண்ணின் செய்து
முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேதமுதல்
காரணன்?’ என்றான்.
பொருள்:
என்னுடைய மிகச்சிறந்த வரபலன்களை எல்லாம் அழிக்கின்றான், இந்த ராமன் சிவபெருமானை இருப்பானோ? அப்படி இரான்; திருமாலாகிய அவனாக இருப்பானோ? அப்படியும் இரான்; தவம் செய்துய் ஆற்றல் பெற்றவனாய் இருப்பானோ என்றால், இத்தகைய பேராற்றலை தவத்தால் செய்து முடிக்கும் தகுதி உடையவன் ஒருவனும் இல்லை ஆதலின் அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான ஆதிப் பரம்பொருள் இவன்தானோ? என்று கூறி வியந்து பிரமித்து நின்றான்.
ராவணனின் பெருமை பற்றி கம்பர் கூற்று
வாரணம் பொருத மார்பும்,
வரையினை எடுத்த தோழும்,
நாரத முனிவர்க்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு,
வெறும் கையேடு இலங்கை புக்கான்
பொருள்:
திசையானைகளின் எதிர் சென்று போரிட்டு தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாயமலையை அள்ளி எடுத்த வலிமைமிகு தோளும், நாரத முனிவர் நன்று நன்று என்று ஏற்குமாறு சாம வேதத்தை இசை நயத்தோடு பாடிய நாவும், பத்து தலையில் இருந்த மணிமுடி பத்தும், தன் தவ வலிமையால் சிவபெருமானிடம் பெற்ற வாளும், தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும் போர்களத்திலே போட்டுவிட்டு வெறும் கையோடு இலங்கை நகர் புகுந்தான்

0 comments:

Post a Comment