நிறைய தமிழ் சங்க இலக்கிய வகைகளில் 'குறிஞ்சி' 'முல்லை' என்று எல்லாம் பாடல்களின் இறுதியில் குறிப்பு இருக்கும்.. அது பற்றி ஒரு சிறு தொகுப்பு..
நான் சாதாரண கடைநிலைக்கும் கீழ்நிலை இலக்கிய அறிவு உள்ளவன்.. கற்றதை கடை விரித்துள்ளேன்.. பிழை காணின், திருத்திக் கொள்வேன்..
அன்றைய தமிழ் இலக்கியங்கள் நமது தமிழர் வாழ்வை 'அகம்' 'புறம்' என இரு வகைகளாக பிரித்துள்ளனர்.. அவை 'அகத்திணை' மற்றும் 'புறத்திணை'
அகத்திணை - தலைவன் மற்றும் தலைவியின் உள்ளம் (அகம்) நுகரும் உணர்வுகளை சார்ந்தது..
புறத்திணை - பண்டைய தமிழ் மக்களின் போர், வீரம், கொடை முதலிய புறம் சார்ந்தது..
அகத்திணை - ஏழு பிரிவுகள்
- கைக்கிளைத் திணை - ஒரு தலைக் காதல்
- குறிஞ்சித் திணை - புணர்தல்
- பாலைத் திணை - பிரிதல்
- முல்லைத் திணை - இருத்தல்
- மருதத் திணை - ஊடல்
- நெய்தல் திணை - இரங்கல்
- பெருந்திணை - பொருந்தாக் காதல்
இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்
குறிஞ்சித் திணை - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன.கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும். குறிஞ்சி திணையின் கடவுள் 'முருகன்'.. "குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்' அல்லவா..
குறிஞ்சி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரியவகை பூ.. இதன் வெண்ணிறம் தலைவன் மற்றும் தலைவியின் காதலைக் குறிக்கும்.
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே - குறுந்தொகை -3
கரிய கொம்பினை உடைய குறிஞ்சி மலர் கொண்டு தேனை உண்டுபண்ணும் வண்டினை கொண்ட நாடன், தன் தலைவன்மீது தான் கொண்டுள்ள அன்பு நிலத்தை விடவும் வானை விடவும் உயர்ந்தது என்பது இதன் பொருள்..
மற்ற திணைகள் பற்றி அடுத்த பதிவில் தொடருவேன்..
0 comments:
Post a Comment